ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டவுடனே இந்த படம் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துவிட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட ‘ஐ’ படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள். படத்தில் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய இந்திய மொழிகள் தவிர உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'Avatar', 'Lord of the Rings', 'Hobbit' உள்ளிட்ட படங்களுக்கு ஒப்பனை செய்த Weta Workshop என்ற நிறுவனம் 'ஐ' படத்தில் பணியாற்றி வருகிறது. Stan Winstion Studios எப்படி 'எந்திரன்' படத்தில் பணியாற்றியதோ, அதைப் போன்று 'ஐ' படத்தில் Weta Workshop பணியாற்றுகிறது. விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். மிக மிக ஒல்லியான தேகம், சராசரியான உடலமைப்பு, பின்னர் கட்டு மஸ்தான உடல் என படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப அவ்வப்போது அவருடைய உடலமைப்பை மாற்றி வருகிறாராம். ஷங்கர், விக்ரமின் இந்த ஈடுபாட்டை மிகவும் பாராட்டியிருக்கிறார். விக்ரமின் ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சனின் உடை, நடிப்பு என அவரையும் வெகுவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதற்கிடையே படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அதை ஏற்றுகொண்ட அர்னால்டு, சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் 'ஐ' இசை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குப் பதிப்புக்கான 'ஐ' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. |