கும்கி படத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் நம்முடைய நட்சத்திர மதிப்பு விண்ணைத்தொடும் என்று லட்சுமிமேனனே நினைத்துப்பாத்திருக்க மாட்டார். சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்தது ஒரு பக்கம், பத்தாம் வகுப்பு மாணவி என்ற இள வயது தோற்றம் இன்னொரு பக்கம் என்று அவரது காலடியில் பட வாய்ப்புகளை குவித்துவிட்டன. அனைத்து முன்னணி இளம் கதாநாயகர்களின் பார்வையும் தற்போது லட்சுமி மேனன் பக்கம் திரும்பிவிட்டன. புதுப்படங்கள் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கும்போதே லட்சுமி மேனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்கிறார்களாம் முன்னணி இளம் கதாநாயகர்கள். இதற்கு கார்த்தியும் விதிவிலக்கில்லை. தற்போது குட்டிப்புலி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதோடு மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் லட்சுமி மேனன் நடித்துள்ள ‘அவதாரம்’ என்ற படமும் நேற்று வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு பெரிய கதாநாயகர்களுடன் நடித்த படங்கள் வெளியாவதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் லட்சுமி மேனன். முன்னணி நாயகர்களின் சிபாரிசு விரல்கள் தன்னை நோக்கி நீள்வதைப் புரிந்து கொண்ட லட்சுமி மேனன் தன் சம்பளத்தை லட்சத்திலிருந்து கோடியாக்கிவிட்டார் என்று தெரியவருகிறது.